கன்னியாகுமரி லாட்ஜில் பெண்ணைக் கொன்றது ஏன்? - கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தபுரத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர், பணத் தகராறு காரணமாகவே கொலையைச் செய்ததாகப் போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள ஆத்திக்காட்டுவிளையைச் சேர்ந்த செல்வி (50) என்பவர், கடந்த செப்டம்பர் 16-ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகக் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையின் அடிப்படையில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் செல்வராஜ் (31) என்பவரைக் கோவையில் வைத்துத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரியும் செல்வராஜ் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சவாரி இல்லாத நாட்களில் கன்னியாகுமரியைச் சுற்றிப் பார்க்க வந்த போது வடசேரி பேருந்து நிலையத்தில் செல்வி அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் விவேகானந்தபுரம் பகுதிக்குச் சென்று ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
தான் குளித்துவிட்டு வந்த போது தன்னிடமிருந்த ரூ.20 ஆயிரத்தை செல்வி எடுத்ததை நேரில் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ள ஓட்டுநர் செல்வராஜ், அதனைத் திருப்பிக் கேட்டபோது தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தில் செல்வியை கீழே தள்ளித் தலையணையால் முகத்தை அழுத்தியதில் அவர் மயக்கமடைந்துள்ளார்.
கொலைக்குப் பிறகு செல்வியின் காதணியைப் பறித்துக் கொண்டு பேருந்து மூலம் தப்பியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட செல்வராஜைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் போலீசார் சிறையில் அடைத்தனர்.