வீடியோ ஆதாரமிருந்தும் வீரமணியைக் கைது செய்யாதது ஏன்? - சீமான்
ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் தலைகுனியச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவதோடு அவர்களுக்கு மரணதண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பெண் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக் காணொளி ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டும், முந்தைய ஆட்சிக்காலத்தில் ஜெம் வீரமணி உடனடியாகக் கைது செய்யப்படாமல் வழக்கு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது வெட்கக்கேடானது என்று சீமான் தனது அறிக்கையில் கடுமையாகக் சாடியுள்ளார்.
காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையைச் சிறப்பு போக்சோ நீதிமன்றம் ஏற்க மறுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதே இந்த வழக்கில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வர முக்கியக் காரணமாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற இந்தக் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திரசிம்மன் உள்ளிட்ட குற்றவாளிகள் மற்றும் இந்த வலையமைப்பில் உள்ள அனைவரையும் கைது செய்து, விசாரணையைத் துரிதப்படுத்தி அதிகபட்சமாக மரணதண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.