வீட்டில் பன்றி வளர்க்கத் தடை போட்ட கணவரை விவாகரத்து செய்த மனைவி - அமெரிக்காவில் அரங்கேறிய விசித்திரம்!

 

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டில் பன்றி வளர்ப்பதற்குத் தடை விதித்த தனது கணவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் உலக அளவில் இணையத்தில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கெய்லா தாம்சன் என்ற பெண்ணுக்கு வீட்டில் பன்றிகளை வளர்ப்பதில் அசைக்க முடியாத ஆர்வம் இருந்துள்ளது. ஆனால், இவரது கணவருக்கு வீட்டில் விலங்குகளை வளர்ப்பதில் விருப்பம் இல்லை என்பதால், பன்றி வளர்க்கத் தொடர்ந்து தடை விதித்து வந்துள்ளார். பன்றி வளர்க்கும் தனது ஆசைக்குக் கணவர் முட்டுக்கட்டை போட்டதால் அதிருப்தி அடைந்த கெய்லா, அவருடன் வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து, தங்களுக்கு இடையேயான 10 ஆண்டுகால திருமண வாழ்க்கையை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்டு அவர் விவாகரத்து பெற்றுள்ளார்.

கணவரை விவாகரத்து செய்த கையோடு, தனது ஆசையை நிறைவேற்றும் விதமாக 'டெய்ஸி' எனப் பெயரிடப்பட்ட புதிய பன்றிக்குட்டியை அவர் சொந்தமாகத் தத்தெடுத்துள்ளார்.

கணவரைப் பிரிந்த கையோடு, தான் தத்தெடுத்த பன்றிக்குட்டியுடன் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள கெய்லா, "என் வாழ்க்கையில் இருந்து ஒரு பன்றியை (கணவரை) நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக உண்மையான இன்னொரு பன்றியைத் தத்தெடுத்துக் கொண்டுவிட்டேன்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டுத் தனது முன்னாள் கணவருக்குப் பகிரங்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இந்தச் சுவாரஸ்யமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.