கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்றுவிட்டு நகைக்காக நாடகமாடிய மனைவி!

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சின்னபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (45). இவர், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், செங்கல் மற்றும் சிமெண்டு கற்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவரது மனைவி சுஜிதாஸ்ரீ (31) என்பவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஐ.டி. ஊழியரான சந்தோஷ் ராஜ் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்துக் கணவன் பூபதி கண்டித்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு தம்பிதியிடையே ஏற்பட்ட மோதலில் பூபதியைக் கீழே தள்ளித் தாக்கியுள்ளனர்.

பின்னர் கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜுவை வீட்டிற்கு வரவழைத்த சுஜிதாஸ்ரீ, இருவரும் சேர்ந்து பூபதியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். அதன்பின்னர் உடலைக் காரில் கொண்டு சென்று ஆற்றுப் பகுதியில் நிறுத்திவிட்டு, மந்திரித்து கயிறு கட்டச் சென்றபோது நகைக்காக மர்ம நபர்கள் கணவரைக் கொன்றுவிட்டதாகக் கூறி நாடகமாடியது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமானது.

இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் தொடர்பாகச் சுஜிதாஸ்ரீயைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜ் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.