கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்... துடிதுடித்து உயிரிழந்த கணவன்!
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, நர்ஸ் வேலை பார்த்து வரும் மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமான முறையில் மயக்க ஊசி மற்றும் ஆசிட் செலுத்திப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (35). இவரது மனைவி சந்தியா (30). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். பிரசாந்த் தனது குடும்பத்தின் பொருளாதார வசதிக்காக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
கணவர் அருகில் இல்லாததைச் சாதகமாக்கிக் கொண்ட சந்தியாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த அனில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. பிரசாந்த் வெளிநாட்டில் இருந்த காலகட்டத்தில், அனிலை வீட்டிற்கே வரவழைத்துச் சந்தியா தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டு வேலையை முடித்துக் கொண்டு பிரசாந்த் சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு தனது மனைவியின் மொபைல் போன் பயன்பாடு மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைக் கண்டு பிரசாந்த் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து கண்காணித்ததில், சந்தியா வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அவர் கையும் களவுமாகக் கண்டுபிடித்தார்.
இந்தக் கள்ள உறவை உடனடியாகக் கைவிடும்படி சந்தியாவை பிரசாந்த் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால், கணவனின் எச்சரிக்கையையும் மீறிச் சந்தியா தனது கள்ளக்காதலனைத் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், தங்களது தனிமைக்குக் கணவன் பெரும் தொந்தரவாக இருப்பதாகக் கருதிய சந்தியா, இதுகுறித்து அனிலிடம் பேசியுள்ளார்.
"உன் கணவர் உயிரோடு இருந்தால் நாம் நினைத்தது போல் உல்லாசமாக இருக்க முடியாது" என அனில் கூற, இருவரும் சேர்ந்து பிரசாந்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். இதற்காக வெங்கட் சாய் என்ற கூலிப்படை நபரின் உதவியை நாடினர். திட்டமிட்டபடி கடந்த ஜூன் 29ஆம் தேதி பிரசாந்த் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த வெங்கட் சாய் அவரோடு நட்பாகப் பழகி, அவருக்கு அதிக அளவில் மது ஊற்றிக் கொடுத்துள்ளார். மது போதை தலைக்கேறி பிரசாந்த் சுயநினைவை இழந்ததும், அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே தள்ளிவிட்டார். ஆனால், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரசாந்த் உயிர் தப்பினார்.
உடனே விபத்து நடந்தது போல் நாடகமாடிய சந்தியாவும் வெங்கட் சாயும், பிரசாந்தை மீட்டு அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்துச் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
மாடியில் இருந்து தள்ளியும் கணவன் சாகாததால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி, அடுத்தகட்டக் கொடூர திட்டத்தை அரங்கேற்றியது. நர்ஸாகப் பணிபுரிந்த சந்தியா, படுக்கையில் இருந்த தனது கணவருக்கு நரம்பு வழியாக வீரியமிக்க மயக்க ஊசியைச் செலுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படும் ஆசிட் திரவத்தையும் உடலில் செலுத்தியுள்ளார்.
இரசாயனம் உடலில் ஏறியதும் பிரசாந்த் வலியால் துடிதுடித்துள்ளார். அப்போது சந்தியா, கணவன் என்றும் பாராமல் அவரைத் தனது காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த பிரசாந்த், ரத்தக் கண்ணீருடன் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் இறந்தவுடன், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் சந்தியா அழுது நாடகமாடியுள்ளார். ஆனால், மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பிரசாந்தின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்தியாவிடம் தங்களது பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். போலீசாரின் அதிரடி விசாரணையில் நிலைதடுமாறிய சந்தியா, கள்ளக்காதலன் அனில் மற்றும் வெங்கட் சாய் ஆகியோருடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் சந்தியா, அவரது கள்ளக்காதலன் அனில் மற்றும் கூட்டாளி வெங்கட் சாய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.