மாஸ்... மெரினா உட்பட சென்னையின்  முக்கியப் பகுதிகளில் இலவச  Wifi!  

 

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் மற்றும் திருவொற்றியூர் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் இலவச வைபை வசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் இணைய சேவை வழங்குநர்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் செ.சரவணன் மற்றும் ஏர்டெல், ஜியோ, ஹாத்வே, ஏசிடி ஆகிய இணைய சேவை வழங்குநர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை வசதியினை ஏற்படுத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி மற்றும் கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் அனைவரும் உடனிருந்து கலந்து கொண்டனர். பொதுமக்களின் நலன் கருதி விரைவில் இந்த இலவச இணைய சேவை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகளும் சேவை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இணைந்து இந்த மக்கள் நலத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தனர்.