கோவை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி - தோட்ட உரிமையாளர் உட்பட 2 பேர் கைது!

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சட்டவிரோதமாகப் பாய்ச்சப்பட்ட மின்சாரம் தாக்கி 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உயிரிழந்த சம்பவத்தில், தோட்ட உரிமையாளர் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளி ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, வேடர் காலனி பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமார் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது.

சிறுமுகை வனச்சரக அலுவலர் மற்றும் வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தோட்டத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலிக்கு, வீட்டில் இருந்து சட்டவிரோதமாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது. தோட்டத்தைக் கடக்க முயன்ற சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மீது மின்சாரம் பாய்ந்ததில், அது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில், அரசு வனக் கால்நடை மருத்துவ அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்துபோன யானையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தனர். மேலும், மின்சார வாரியச் செயற்பொறியாளர் தலைமையிலான அதிகாரிகளும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

சட்டவிரோதமாக உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்சி காட்டு யானை இறப்பதற்குக் காரணமாக இருந்ததாக குமார் (65) - தோட்ட உரிமையாளர் மற்றும் பாக்கியராஜ் (42) - விவசாயக் கூலித் தொழிலாளி ஆகிய இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், அவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.