வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை... ரயில்வே கேட்டை முட்டி உடைத்து அட்டகாசம்!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று மூடி வைக்கப்பட்டிருந்த ரயில்வே கேட்டை முட்டி உடைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகாவிற்கு உட்பட்ட ஹசிடே கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், உணவிற்காகவும் தண்ணீருக்காகவும் வனவிலங்குகள், குறிப்பாகக் காட்டு யானைகள் அடிக்கடி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளது.
சம்பவத்தன்று இரவு, ஹசிடே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பாதையில் ரயில் வருகைக்காகக் கேட் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. அப்போது, அருகிலிருந்த வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய காட்டானை ஒன்று ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. ஆனால், பாதை அடைக்கப்பட்டு ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்த யானை, தனது பலத்தைப் பயன்படுத்தி இரும்பாலான ரயில்வே கேட்டை முட்டித் தள்ளி உடைத்துச் சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து நிதானமாக நகர்ந்து சென்றது.
அச்சமயத்தில் ரயில் எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் மற்றும் விபத்து தவிர்க்கப்பட்டது. யானை கேட்டை முட்டி உடைத்துச் செல்லும் அதிரடி காட்சிகளை அங்கிருந்த பயணிகள் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று சேதமடைந்த ரயில்வே கேட்டைப் பார்வையிட்டனர். மேலும், தண்டவாளப் பகுதியைக் கடந்து சென்ற காட்டு யானையை மீண்டும் பாதுகாப்பாகக் காட்டுக்குள் விரட்டும் பணிகளிலும், தண்டவாளப் பாதையில் கூடுதல் கண்காணிப்புப் பணிகளிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.