தேயிலை தோட்டத்தில் அசையாமல் கிடந்த காட்டு யானை... அருகில் சென்ற தொழிலாளர்களுக்குச் காத்திருந்த ஆச்சரியம்!

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் அசையாமல் கிடந்த காட்டு யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், பின்னர் அது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததை அறிந்து நிம்மதியடைந்த சம்பவம் அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடுகாணி டான் டீ தேயிலைத் தோட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள், காட்டு யானை ஒன்று தரையில் படுத்துக் கொண்டு எவ்வித அசைவுமின்றி அசையாமல் கிடப்பதைக் கண்டுள்ளனர். அது இறந்துவிட்டதோ என்ற சந்தேகத்தில் அச்சத்துடன் அருகில் சென்று பார்த்துள்ளனர்.

யானையின் அருகில் சென்று கவனித்தபோது, அது இறக்கவில்லை என்றும், மனிதர்களைப் போல நிம்மதியாகப் படுத்து உறங்கி மூச்சு விட்டுக்கொண்டிருந்ததையும் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அங்கிருந்து தள்ளி நகர்ந்தனர்.

கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் அமைதியான தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், யானை மனிதனைப் போல் படுத்து உறங்கும் இந்தக் காட்சி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.