ஊட்டியில் தொடரும் காட்டு யானைகளின் நடமாட்டம் - தொட்டபெட்டா பகுதியில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பீதி!
நீலகிரி மாவட்டம் ஊட்டியின் முக்கிய சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா மலைச்சிகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டபெட்டா பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டிருந்ததால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் சிகரத்திற்குச் செல்ல வனத்துறை தற்காலிகத் தடை விதித்திருந்தது.
வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பிற்குப் பிறகு, அந்த யானை அங்கிருந்து குன்னூர் வனப்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து சென்றது. இருப்பினும், தற்போது மீண்டும் அந்தப் பாதையில் யானைகளின் நடமாட்டம் தென்படுவதால் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டியுள்ள பகுதிகளில் யானைகள் உலா வருவதால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர்.
யானைகள் இடம்பெயரும் வழித்தடங்களில் மக்கள் நடமாட வேண்டாம் என்றும், யானைகளைக் கண்டால் அவற்றுடன் செல்பி எடுப்பது அல்லது கற்களை வீசித் தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் வனத்துறை எச்சரித்துள்ளது. தற்போதைய சூழலில் தொட்டபெட்டா சிகரத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் 78.54% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த யானை நடமாட்டம் தேர்தல் பணிகளிலும் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.