காட்டுத்தீ... சதுரகிரி மலையேற திடீர் தடை - கலெக்டர் உத்தரவு!
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ள வனப்பகுதியில் திடீரெனக் காட்டுத்தீ பரவியதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை 4 நாட்களுக்குப் பக்தர்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சதுரகிரி மலை ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் திடீரெனக் காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது.
காட்டுத்தீயின் தாக்கம் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சதுரகிரி மலையேறத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையைக் கண்காணிக்கும் பணியிலும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீயின் தன்மையைப் பொறுத்து, ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதைக் குறித்து வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் பரிசீலித்து முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.