கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ - பூம்பாறை அருகே பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூம்பாறை அருகே உள்ள தனியார் மற்றும் அரசு வருவாய் நிலங்களில் நேற்று இரவு திடீரெனத் தீப்பிடித்தது. நேற்று இரவு தொடங்கிய தீ, செடி கொடிகள் காய்ந்து போயிருந்ததால் மளமளவெனப் பரவி பெரும் பகுதியைக் கபளீகரம் செய்தது. பயங்கர காட்டுத்தீ காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கும், அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்கும் சுவாசப் பாதிப்பை ஏற்படுத்தியது.
வருவாய் நிலங்களில் பற்றி எரியும் தீ, அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீ தடுப்புக் கோடுகள் அமைத்தும், நவீனக் கருவிகள் மூலமும் தீயை அணைக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காற்று பலமாக வீசுவதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால் நிலவுகிறது.
கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கிவிட்டதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில்: வரும் நாட்களில் இது போன்ற விபத்துகளைத் தடுக்க வனத்துறையினர் 'வாட்ச் டவர்கள்' அமைத்துக் கண்காணிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் எரியும் சிகரெட் துண்டுகளை வீசுவதைத் தவிர்க்கவும், வனப்பகுதிகளில் சமைப்பதைத் தடுக்கவும் கடும் விதிகளை அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.