வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுன்னா? - ₹5,000க்கு பரிசுப் பொருட்கள் விநியோகித்ததால் தேர்தல் ஆணையத்தில் புகார்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியில் கடந்த மார்ச் 20-ஆம் தேதி ஒரு தனியார் மண்டபத்தில் இஸ்லாமிய மக்களுக்கான 'இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி' நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 500 முதல் 600 நபர்களுக்கு, தலா 5,000 ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜய் தலைமையிலான குழுவினர், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் விஜய் கூறுகையில், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது ஒரு தண்ணீர் பாட்டில் கூட வழங்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், ஆதவ் அர்ஜுனா இப்தார் நோன்பு என்ற பெயரில் வாக்காளர்களைக் கவரும் வகையில் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

வில்லிவாக்கம் தொகுதியில் தனது பண பலத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். இது லஞ்சம் கொடுப்பதற்கு இணையான செயலாகும். பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களைத் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளோம்.

தமிழக வெற்றிக் கழகம் முதன்முதலாகத் தேர்தல் களம் காணும் நிலையில், அதன் முக்கிய நிர்வாகி மீது எழுந்துள்ள இந்தப் புகார் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி, வீடியோ ஆதாரங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆதவ் அர்ஜுனா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.