வீட்டுக் கடன் ஈ.எம்.ஐ குறையுமா? நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்ப்பு - இன்று ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

 

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவின் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான 'ரெப்போ ரேட்' குறித்து எடுக்கப்படும் முடிவு இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த காலங்களில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து வந்துள்ளது.  கடந்த 2025 பிப்ரவரி முதல் டிசம்பர் வரை வட்டி விகிதம் மொத்தம் 1.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன் விளைவாகத் தற்போது ரெப்போ ரேட் 5.25 சதவீதமாக உள்ளது.

பிப்ரவரி மாதத்தில் சில்லறை பணவீக்கம் 2.74 சதவீதத்திலிருந்து 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், வட்டி விகிதத்தைக் குறைப்பது சவாலாக மாறியுள்ளது.

இந்தக் கூட்டத்தின் மிக முக்கியமான அம்சம், ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் ஆகும். போரால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது. இது நேரடியாகப் பொருட்களின் விலையை (பணவீக்கத்தை) உயர்த்தும்.

இந்த அசாதாரண சூழலில், வட்டி விகிதத்தை மேலும் குறைத்தால் பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே, இன்று வெளியாகும் அறிவிப்பில் 5.25 சதவீத வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது என்றே பெரும்பாலானோர் கணிக்கின்றனர்.

தற்போது 5.25% என்ற நிலையில் வட்டி விகிதம் தொடர்ந்தால், உங்களது வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் மாதத் தவணைகளில் எந்த மாற்றமும் இருக்காது. ஒருவேளை 0.25% வட்டி குறைக்கப்பட்டால், அது புதிய கடன் வாங்குபவர்களுக்கும், மிதக்கும் வட்டி விகிதத்தில் கடன் பெற்றவர்களுக்கும் பெரும் சுமையைக் குறைக்கும்.

நகை கடன்களுக்கான வட்டியும் இதைப் பொறுத்தே அமையுமாதலால், சாமானிய மக்கள் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இன்று காலை ரிசர்வ் வங்கி கவர்னர் வெளியிடப்போகும் அந்த முக்கிய அறிவிப்பு, பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.