பழி தீர்க்குமா இந்தியா? தொடரைக் கைப்பற்றப் போவது யாரு? இன்று கடைசி போட்டியில் இங்கிலாந்துடன் மோதல்!
இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில், இந்த ஒருநாள் தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணியில் கடந்த இரு போட்டிகளிலும் முறையே 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்த 39 வயதான சீனியர் வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டம், இந்த ஆட்டத்தில் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாகி இருக்கிறது. சமீபத்திய ஆட்டங்களில் அவர் சற்று தடுமாற்றத்தைச் சந்தித்து வருவதால், இன்றைய போட்டியில் அவர் ஃபார்முக்குத் திரும்புவது அணிக்கு அவசியமாகிறது.
மறுபுறம், காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக, இளம் வீரர் ஹர்ஷ் துபே அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தொடரைக் கைப்பற்றி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் இன்று மல்லுக்கட்ட உள்ளன. இரு அணிகளுமே சம பலத்துடன் விளங்குவதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் பஞ்சம் இருக்காது.
இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு இந்தத் தீர்மானமிக்க இறுதிப் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியைத் தொலைக்காட்சி நேயர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 4 மற்றும் 5 ஆகிய சேனல்கள் வாயிலாக நேரடி ஒளிபரப்பில் கண்டு மகிழலாம்.