இன்று இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதல் - கனவு கைகூடுமா? ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் எகிறும் எதிர்பார்ப்பு!
தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் AFC மகளிர் ஆசியக் கோப்பை (U20) கால்பந்து தொடரில், 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இன்று தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியிடம் 0-6 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் பாதியில் ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாகப் போராடிய இந்திய வீராங்கனைகள், இரண்டாம் பாதியில் ஜப்பானின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் சீன தைபே அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.
குரூப் 'சி' பிரிவில் தற்போது ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், இன்றைய ஆட்டத்தில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு 'டிரா' அல்லது வெற்றியைப் பெற வேண்டியது அவசியம்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோகிம் அலெக்சாண்டர்சன் கூறுகையில், "ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பாதியில் காட்டிய அதே போராட்ட குணத்தை இன்றைய ஆட்டத்திலும் வெளிப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியா உடல் ரீதியாகப் பலம் வாய்ந்த அணி, எனவே மிகுந்த மனவலிமையுடன் விளையாடுவது அவசியம்" எனத் தெரிவித்தார்.