அரசின் நல்ல திட்டத்தை அதிகாரிகளே கவிழ்ப்பதா? வெள்ளை அறிக்கை கேட்கும் போக்குவரத்து தொழிலாளர்கள்!

 

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காகத் தமிழகப் போக்குவரத்துத் துறை சார்பில் வாடகைக்கு எடுக்கப்பட்ட தனியார் பேருந்து திட்டம் பெரும் நிதி இழப்பையும் பின்னடைவையும் சந்தித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

பண்டிகைக் காலத்தில் தடையற்ற போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், ஒரு பேருந்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.45,000 வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுப் பல தனியார் பேருந்துகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. இருப்பினும், உரிய வழித்தட திட்டமிடல் இல்லாததால், தூத்துக்குடி மண்டலத்தில் 13 பேருந்துகளும், திருநெல்வேலி மண்டலத்தில் 15 பேருந்துகளும் போதிய பயணிகள் இன்றி முற்றிலும் காலியாகவே இயக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு லட்சக்கணக்கில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் நல்லெண்ண அடிப்படையிலான ஒரு சிறப்பு திட்டத்தை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் தவறான மேலாண்மையும் வழிகாட்டுதல் இன்மையுமே தோல்வியில் முடிவடையச் செய்துள்ளதாகப் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பயணிகள் தேவை அதிகமுள்ள வழித்தடங்களைக் கண்டறியாமல், முறையான முன்அறிவிப்பின்றிப் பேருந்துகளை இயக்கியதே இந்த நஷ்டத்திற்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள தொழிலாளர்கள், இத்திட்டத்தின் மூலம் ஏற்பட்ட நிதி இழப்பு மற்றும் குளறுபடிகள் குறித்து அரசு உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.