விஜய் வாகனத்தில் வேட்பாளர்கள் நிற்க?! - தவெக பிரசாரக் களத்தில் பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசாரம் மாநிலம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அக்கட்சியின் தேர்தல் வியூகங்கள் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. "ஒவ்வொரு வாக்கும் விஜய்க்கே" என்கிற ஒற்றை இலக்கை நோக்கி நகரும் கட்சியின் புதிய நிபந்தனைகள் தற்போது கசிந்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராகக் கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி, ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் + விசில் = வெற்றி! என்று பிரசாரத்தின் போது 'விஜய்' என்கிற பிம்பம் மற்றும் 'விசில்' என்கிற சின்னம் ஆகிய இரண்டை மட்டுமே மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். வேட்பாளர்களை விடத் தலைவரே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். விழும் ஒவ்வொரு வாக்கும் அந்தந்த தொகுதி வேட்பாளருக்கானது என்பதை விட, அது நேரடியாக விஜய்க்கான வாக்காகவே இருக்க வேண்டும் என்பதே இந்த வியூகத்தின் சாராம்சம் என்கின்றனர் கட்சியினர்.
இந்த நிபந்தனையின் ஒரு பகுதியாக, விஜய்யின் பிரசார வாகனத்தில் அந்தந்த தொகுதி வேட்பாளர்களை ஏற்றக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று காரைக்குடியில் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது இதற்கான மோதல் பகிரங்கமாக வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. காரைக்குடி தொகுதி வேட்பாளர் பிரபு, விஜய்யின் பிரசார வாகனத்தில் ஏற முயன்றபோது, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அவரை தடுத்து நிறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தனது சொந்தத் தொகுதியிலேயே வாகனத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதால் பொறுமையிழந்த பிரபு, அந்த நிபந்தனையை மீறி விஜய்யின் வாகனத்தில் ஏறியதாகக் கூறப்படுகிறது. இது அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
"வேட்பாளர்களை வாகனத்தில் ஏற்றினால் மக்களின் கவனம் சிதறும், முழு கவனமும் விஜய்யின் மீதே இருக்க வேண்டும்" என்கிற வியூகம் ஒருபுறம் சரியெனத் தோன்றினாலும், வேட்பாளர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்கிற அச்சமும் ஒரு தரப்பு நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது.
ஆனாலும், "தளபதி சொன்னால் அது கட்டளை" எனத் தொண்டர்கள் வழக்கம் போலத் தங்களது பிரசாரப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். விஜய் வாகனத்தில் வேட்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தவெக-வின் மற்ற தொகுதி வேட்பாளர்கள் மத்தியிலும் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.