திமுக கோட்டையைத் தகர்க்குமா தவெக? பெரம்பூரில் விஜய்க்கு மாற்று வேட்பாளராக 'தளபதி' சிவா!

 

ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக, தவெக தலைவர் விஜய் இன்று சென்னை வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்துள்ளவர் வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா. தொகுதி மக்களால் அன்போடு 'தளபதி' சிவா என்று அழைக்கப்படும் இவர், கடந்த சில ஆண்டுகளாகவே பெரம்பூர் தொகுதியில் தவெக-வின் அடித்தளத்தைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

வேட்பாளர்கள் அறிமுக விழாவின் போது, தனக்காகத் தான் போட்டியிட வேண்டிய தொகுதியை விட்டுக் கொடுத்த சிவாவை மேடைக்கு அழைத்து விஜய் பாராட்டினார். இது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் விஜய் தனது மனுவை ஒப்படைத்தார். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பெரம்பூர் மற்றும் வியாசர்பாடி பகுதிகள் மக்கள் கடலாகக் காட்சியளித்தன. 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ ஆர்.டி. சேகர் மீண்டும் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நடுத்தர வர்க்கத்தினர், உழைக்கும் மக்கள், மற்றும் கணிசமான அளவில் உள்ள கிறிஸ்தவ மற்றும் வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்து விஜய் இங்கு களம் இறங்கியுள்ளார். பெரம்பூர் தவிர, திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.