‘ஜனநாயகன்’ ரிலீஸாக தேர்தல் கமிஷன் அனுமதிக்குமா? - அர்ச்சனா பட்நாயக் பதில்!
0தமிழக சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், த.வெ.க தலைவர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்துத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
நடிகர் விஜய் ஒரு அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் சூழலில், அவர் வேட்பாளராகக் களம் இறங்கினால் அவரது திரைப்படம் வெளியாவதில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "ஒரு முன்னணி நடிகராகவும், அதே சமயம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் இருப்பவர் வேட்பாளராகும் போது, அவர் நடித்த படம் வெளியாவது இதுவே முதன்முறை. இது ஒரு முக்கியமான கேள்வி. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையம்தான். இது தொடர்பாகத் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு, அதன் பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும்."
தமிழகத்தில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த முறை 151 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், தேர்தல் நாளன்று பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். தேர்தல் பணிக்காக மொத்தம் 300 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வரவுள்ளனர்.
தேர்தல் விதிமீறல்களைப் பொதுமக்கள் உடனுக்குடன் புகாரளிக்க 'சி-விஜில்' செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்றும், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி காட்டுமா அல்லது தேர்தல் முடியும் வரை காத்திருக்கச் சொல்லுமா என்பது விஜய்யின் ரசிகர்களிடையேயும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.