ஜெம் வீரமணி வீட்டில் சிறுமி கொன்று புதைப்பா? ஜேசிபியால் பள்ளம் தோண்டி 6 மணி நேரம் தீவிர சோதனை!
ஏழை மற்றும் பட்டியலினச் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதாகியுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியின் வீட்டில், சிறுமி ஒருவர் கொன்று புதைக்கப்பட்டதாகக் கார் ஓட்டுநர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் 6 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தடயங்கள் எதுவும் சிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது ஏழை மற்றும் பட்டியலினச் சிறுமிகளுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறியும், மிரட்டல் விடுத்தும் பாலியல் தொந்தரவுகள் வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இப்புகார்கள் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வீரமணி, அவரது தோழி சாந்தி, சாந்தியின் கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் சில ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டு, ஒரு வழக்கில் மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக வீரமணியின் கார் ஓட்டுநர் ஒருவர் காவல்துறையினரிடம் புதிய தகவல் ஒன்றை அளித்துள்ளார். கார் ஓட்டுநரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், வீரமணியின் வீட்டின் பின்பகுதியில் சிறுமி ஒருவர் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சோதனை நடத்தத் முடிவு செய்யப்பட்டது.
காவல்துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் வீரமணியின் வீட்டின் பின்புறப் பகுதியில் சுமாா் 6 மணி நேரத்திற்கும் மேலாக நிலத்தைத் தோண்டித் தீவிரமாகச் சோதனை நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப் பரிசோதனையில், சிறுமி புதைக்கப்பட்டதற்கான எந்தவொரு தடயமும் அல்லது எலும்புக்கூடுகளும் சிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டில் சிறுமி புதைக்கப்பட்ட விவகாரம் உண்மையா அல்லது வதந்தியா என்பது குறித்தும், கார் ஓட்டுநர் அளித்த வாக்குமூலம் குறித்தும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.