90% மலிவு விலையில் மருந்துகள் - தவெக அரசின் வாக்குறுதி அமலாகிறது?!

 

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தங்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பயன்படும் வகையில் 90 சதவீதம் வரை மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பகுதியை மருத்துவச் செலவுகளும், மருந்து மாத்திரைகளுமே ஆக்கிரமிக்கின்றன. இதனை மாற்றியமைக்கும் நோக்கில், தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் ஒரு புரட்சிகரமான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உயர் ரக கட்டண மருந்துகள், வெளிச்சந்தையில் விற்கப்படும் விலையை விட 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை மிக மலிவான விலையில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த முக்கிய வாக்குறுதியை எளிய மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அருண்ராஜ் தலைமையில் விரைவில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு நிலவரம் குறித்தும், அவற்றை மருந்து நிறுவனங்களிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

சமீபத்தில், "அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு" வழங்கப்படும் என்ற தவெக-வின் வாக்குறுதி பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், தற்போது இந்த "மலிவு விலை மருந்துத் திட்டமும்" அடுத்தடுத்து அமலாக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் சாமானிய நுகர்வோர் மற்றும் நலிவடைந்த பிரிவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்தால், தமிழகத்தில் மருத்துவத்துறை ஒரு புதிய மைல்கல்லை எட்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.