இங்கிலாந்தில் 4 நாடுகளுக்குக் கல்வி விசா ரத்து - இந்திய மாணவர்களுக்கு பாதிப்பா?!
இங்கிலாந்தில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்கும் முயற்சியாக, அந்நாட்டு அரசு ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளுக்குக் கல்வி விசா வழங்குவதை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, அந்நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோதக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் கல்வி விசாவைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்துவிட்டு, பின்னர் அங்கேயே தஞ்சம் கோருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து உள்துறை மந்திரி ஷபானா மஹ்மூத் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர், சூடான் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இனி கல்வி விசா வழங்கப்பட மாட்டாது:
இங்கிலாந்து அரசு நடத்திய ஆய்வில் குறிப்பாக ஆப்கானிஸ்தானிலிருந்து கல்வி விசாவில் வந்தவர்களில் சுமார் 95 சதவீதத்தினர், படிப்பு முடிந்த பின்னரோ அல்லது படிப்பைத் தொடராமலோ அங்கேயே தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளனர். கல்வி விசா என்பது நாட்டிற்குள் சட்டப்பூர்வமாக நுழைவதற்கான ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், இது நாட்டின் குடியேற்றக் கொள்கையைப் பாதிப்பதாகவும் அரசு கருதுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி விசா மட்டுமின்றி, வேலை விசாக்களையும் ரத்து செய்து இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விசா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கான புதிய சட்டத்திருத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.
தற்போதைய அறிவிப்பில் இந்தியா இடம் பெறவில்லை. இருப்பினும், இங்கிலாந்து அரசு தனது குடியேற்ற விதிகளைத் தொடர்ந்து கடுமையாக்கி வருவதால், வெளிநாடுகளில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் விசா விதிமுறைகளைத் துல்லியமாகக் கண்காணிப்பது அவசியமாகிறது.