திருச்சியில் விதிகளை மீறி ரோடு ஷோ-வா? 5 கி.மீ தூரத்திற்கு அலைமோதிய மக்கள் கூட்டம்! 

 

ஏற்கனவே கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த விஜய், இன்று தனது இரண்டாவது தொகுதியான திருச்சி கிழக்கில் மனுத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்ட விஜய்க்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வீசி எறிந்த கட்சித் துண்டுகளை முகம் சுளிக்காமல் பிடித்துத் தனது தோளில் அணிந்து கொண்ட விஜய், வாகனத்தில் நின்றபடி கையசைத்து மக்களை உற்சாகப்படுத்தினார்.

விமான நிலையத்திலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடம் வரையிலான சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தை அவர் திறந்த வாகனத்திலேயே கடந்து வந்தார்.

விஜய் வரும் இடங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க 'ரோடு ஷோ' போன்ற பேரணிகளை நடத்தத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.

காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்கிய போதிலும், தடையை மீறி விஜய் சுமார் 5 கி.மீ தூரம் ரோடு ஷோ நடத்தியது தேர்தல் விதிகளுக்குப் புறம்பானது எனச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வேட்புமனுத் தாக்கலை முடித்த கையோடு, இன்று மதியம் முதல் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருச்சியின் 8 சட்டமன்றத் தொகுதிகளின் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காகத் திருச்சியின் முக்கிய இடங்களில் பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.