இன்று சட்டசபையில் அனல் பறக்குமா? எகிறும் எதிர்பார்ப்பு... எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை!

 

3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. முந்தைய விவாதங்களின்போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கடும் குற்றச்சாட்டுகளுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று பதிலளிக்க உள்ளதால், சட்டசபையில் பெரும் எதிர்பார்ப்பும் அனல் பறக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

கடந்த 4, 5 மற்றும் 6-ந்தேதி என 3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சபை கூடுகிறது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளபடி, இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரம் கிடையாது; மாறாக அரசினர் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.

இதுவரை 18 நாட்களாக நடைபெற்ற கூட்டத்தொடரில், கடந்த 3-ந்தேதியன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தன்வசம் வைத்துள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினர்.

"த.வெ.க. அரசு அமைந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் அடங்கும்" என்று குறிப்பிட்ட அவர், இவற்றுக்கு முதல்-அமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தினார்.

த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து விட்டதாக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும் குற்றஞ்சாட்டினார்.

பேரவை விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான கேள்விகளுக்குப் பதிலளித்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை அளிக்கிறேன். நான் இப்போது வெளியே சென்றாலும் கேள்விகள் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலைச் சொல்வேன். அப்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று உத்தரவாதம் கேட்டுவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான விவாதங்களுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று பதிலளித்துப் பேசுகிறார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் தரப்பில் என்ன மாதிரியான தரவுகளுடன் கூடிய பதில்கள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தாண்டி புதிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

முதல்வரின் பதிலுரையைத் தொடர்ந்து, வனத்துறை, வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை அறிவிப்புகள், அதன் மீதான விவாதங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் பதிலுரைகளும் இன்று இடம்பெறவுள்ளன.