விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பா?! - தேர்தல் அதிகாரி விளக்கம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் பரப்புரைக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளதாகப் பரவிய செய்திகளுக்குச் சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி குமரகுருபரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
"விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படவில்லை. ஆனால், அனுமதி கோரும் முறையில் சில விதிமுறைகள் உள்ளன" என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தேர்தல் விதிமுறைகளின்படி, எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் பரப்புரை அல்லது பொதுக்கூட்டம் நடத்த விரும்பினால், அதற்கான விண்ணப்பத்தை 48 மணி நேரத்திற்கு முன்பாகவே முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். கூட்டத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு அல்லது கடைசி நேரத்தில் அனுமதி கோரினால், பாதுகாப்பு மற்றும் பிற தொழில்நுட்பக் காரணங்களால் அனுமதி வழங்க இயலாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று நடைபெறவிருந்த தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு அனுமதி கிடைக்காததால் அது ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது தேர்தல் அதிகாரியின் விளக்கத்தின் மூலம், அனுமதி பெறுவதற்கான கால அவகாசத்தில் ஏற்பட்ட குறைபாடே இதற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெக சார்பில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கப்பட்டு, வரும் மார்ச் 29-ஆம் தேதி (நாளை மறுநாள்) 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நுங்கம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.