நாளை மெக்கா செல்கிறாரா விஜய்?! - மத நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆன்மீகச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று அதிகாலை, விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதிகாலை 5 மணிக்கு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் அவர் பங்கேற்றார். அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் 'வேல்' வழங்கப்பட்டது. பாரம்பரிய பட்டு வேட்டி மற்றும் சட்டையில் விஜய் வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

திருச்செந்தூர் பயணத்தை முடித்துவிட்டுச் சென்னை திரும்பிய விஜய், இன்று மகாராஷ்டிராவில் உள்ள புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்றுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய மன அமைதி மற்றும் வெற்றிக்காக அவர் இந்த வழிபாடுகளை மேற்கொண்டு வருவதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை விஜய் புனித மெக்கா நகருக்குச் செல்ல இருப்பதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன. இது குறித்துத் தமிழக வெற்றி கழகத்தின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், தனது கட்சிக் கொள்கையான மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ புனிதத் தலங்களுக்கு அவர் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே மெக்கா பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்கா பயணத்தைத் தொடர்ந்து, அவர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கும் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக இந்தப் பயணங்களை அவர் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.