"இலவசமாகப் புள்ள தாரேன்னு சொன்னா வாங்குவீங்களா?" - சீமான் ஆவேசப் பேச்சு!

 

திருக்கோவிலூரில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இலவசத் திட்டங்களை நம்பி வாக்களிக்கும் மக்களை நோக்கி அதிரடியான கேள்விகளை எழுப்பினார். பிரச்சாரத்தின் போது பேசிய சீமான், திராவிடக் கட்சிகளின் இலவசத் திட்டங்களைக் கடுமையாகச் சாடினார்:

"அனைத்தையும் இலவசமாகத் தருகிறார்கள் என்பதற்காக வாங்கிக் கொள்கிறீர்கள். நாளை 'இலவசமாகப் புள்ள (குழந்தை) தாரேன்னு' சொன்னால் வாங்கிக் கொள்வீர்களா? இலவசம் என்பது எவ்வளவு மானங்கெட்ட செயல் என்பது உங்களுக்குப் புரிகிறதா?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது. தேர்தலில் முதலீடு செய்யும் அரசியல்வாதிகள், அந்தப் பணத்தை எடுப்பதில்தான் குறியாக இருப்பார்களே தவிர, மக்களுக்குச் சேவை செய்ய மாட்டார்கள் எனச் சுட்டிக்காட்டினார்.

"ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். ஆனால், இதுதான் சிறந்த ஆட்சி என்கிறார் முதல்வர் ஸ்டாலின். இது எப்படிச் சிறந்த ஆட்சியாகும்?" என வினவினார். நாம் பயன்படுத்தும் செல்போனுக்குப் புதிய மாடல்களைத் தேடுகிறோம். ஆனால், 60 ஆண்டுகளாக ஏன் அதே பழைய கட்சிகளையே மீண்டும் மீண்டும் தேர்வு செய்கிறீர்கள்? என மக்களைப் பார்த்துக் கேட்டார்.

தமிழகத்தின் மலைகளும் மணல் வளங்களும் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவற்றை மீண்டும் மீட்டெடுக்க முடியுமா? என்ற கவலையையும் அவர் வெளிப்படுத்தினார்.

"குறிப்போடு பேசக்கூடாது, குறிக்கோளோடு பேச வேண்டும். ஒருமுறை எங்கள் பிள்ளைகளின் (நாம் தமிழர் கட்சி) ஆட்சியைப் பாருங்கள். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கல்வி மற்றும் மருத்துவம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து, நமது நாட்டிலும் அத்தகைய தரத்தை உருவாக்க வாக்குகளை அளியுங்கள்" எனச் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.