த்ரிஷா மீது வழக்குப் போடுவீங்களா...? கோவையில் அனுமதியின்றி ரோடு ஷோ நடத்திய சர்ச்சை!
கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை திரிஷா, அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.
ரசிகர்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்:கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ள தனியார் மொபைல் கடையைத் திறந்து வைக்க நடிகை திரிஷா நேற்று முன்தினம் வருகை தந்தார். அவரைக் காண்பதற்காக கடையில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, தனது காரில் இருந்தபடியே சுமார் 100 மீட்டர் தூரம் வரை ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து, இதய வடிவம் காண்பித்துச் சென்றார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளதுடன், சட்டவிரோதமாகக் கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொதுப் பாதையில் வழிமறித்தல், அரசு உத்தரவை மீறுதல் என நான்கு முக்கிய சட்டப் பிரிவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்:
ஏற்கனவே அனுமதியின்றிப் பிரச்சாரம் செய்ததாகத் தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அதே சட்டவிதிகளின்படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடிகை திரிஷா மீதும் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் அரசியல் மற்றும் சமூக வலைத்தள வட்டாரங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.