நெருப்பு வெயிலால்... கருகும் மக்கள்... ஐரோப்பாவில் 40 டிகிரியை செல்சியஸைத் தாண்டியதால் 33 பேர் பலி!
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பஅலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த அதீத வெப்பத்தின் காரணமாகவும், வெப்பத்தைத் தணிக்க நீர்நிலைகளில் குளிக்கச் சென்ற போதும் என ஐரோப்பா முழுவதும் இதுவரை 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதிகளில் இருந்து ஐரோப்பாவை நோக்கி வீசி வரும் மிகக் கடுமையான வெப்பக் காற்றே இந்த வரலாறு காணாத வெப்பநிலை உயர்வுக்கு முதன்மைக் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பாவின் பல நாடுகளில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிப் பதிவாகி வருகிறது. பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒருநாள் மட்டும் அதிகபட்சமாக 29.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்தக் கடுமையான வெப்பநிலையின் உக்கிரத்தால் கடந்த வார இறுதியில் இருந்து உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
பல பிராந்தியங்களில் நிலவும் 40 டிகிரிக்கும் அதிகமான சுட்டெரிக்கும் வெயிலின் நேரடித் தாக்கத்தால், கடந்த வார இறுதி நாட்களிலிருந்து மட்டும் வெவ்வேறு இடங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் நிலவி வரும் இந்தத் தாங்க முடியாத தகிப்பைத் தணிப்பதற்காக, பொதுமக்கள் பலர் ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் சென்றுள்ளனர். அவ்வாறு எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வெப்ப அலையின் தீவிரம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்பதால், ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் தங்களது குடிமக்களுக்கு அவசரக்கால எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. பொதுமக்கள் மதிய வேளையில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்குமாறும், போதிய அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.