தவெக அரசுக்கான ஆதரவு வாபஸ்; எடப்பாடியுடன் வேலுமணி, சி.வி.சண்முகம் சமாதானம்!
தமிழக அரசியல் களம் தினமொரு திருப்புமுனையைக் கண்டு வரும் சூழலில், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்குள் நிலவி வந்த மிகப்பெரிய பிளவு முடிவுக்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் போட்டியாகக் கொறடா விவகாரத்தைக் கையில் எடுத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் மீண்டும் பொதுச்செயலாளரின் ஒற்றைத் தலைமையின் கீழ் இணைந்துள்ளனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தனி அணியாகச் செயல்பட்டு வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். கட்சியின் நலன் மற்றும் தற்போதைய அசாதாரண அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, பழைய கசப்புகளை மறந்து இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட முழுமையான உடன்பாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, தற்காலிகக் கருத்து வேறுபாடுகளால் நேர்ந்த தவறுகளுக்குப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் தங்களது தரப்பு மன்னிப்புக் கடிதத்தை முறைப்படி வழங்கியுள்ளனர். முன்னதாக, சட்டசபையில் தங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாகக் கூறி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கொறடா விவகாரம் தொடர்பாக வேலுமணி தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் ஒரே தலைமையின் கொறடா உத்தரவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதிமுகவிற்குள் நடந்த இந்த திடீர் இணைப்பு, ஆளும் தவெக கூட்டணி அரசுக்கு உடனடியாக ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
எஸ்பி வேலுமணி அணியின் மறைமுக ஆதரவோடு சட்டமன்றத்தில் தப்பித்து வந்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, தாங்கள் அளித்து வந்த ஆதரவை இந்த இணைப்பின் மூலம் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஒட்டுமொத்தமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்ட சூழலில், வேலுமணி அணியின் ஆதரவு விலகலால் சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 120 ஆகக் குறைந்துள்ளது.