“நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது!” - டிரம்ப் ஆவேசம்; வெள்ளை மாளிகை vs வாடிகன் - வெடித்தது நேரடி மோதல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் 14-ம் லியோவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். "தான் இல்லாவிட்டால் வாடிகன் என்ற ஒன்றே இருக்காது" என அவர் கூறியுள்ளது கத்தோலிக்க நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக நடைபெற்று வரும் சர்வதேசப் போர்களைக் குறிப்பிட்டு, "முட்டாள்தனமான போர்களை நிறுத்துங்கள், அமைதிக்கு வழிவிடுங்கள்" என போப் 14-ம் லியோ உலக நாடுகளுக்குத் திறந்த மடல் ஒன்றை விடுத்திருந்தார். இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை மறைமுகமாகச் சாடுவதாகக் கருதிய டிரம்ப், தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "போப் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். அவர் தனது மதப் பணிகளை விட்டுவிட்டு ஒரு அரசியல்வாதியைப் போலச் செயல்படுகிறார். இது தேவாலயங்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்."
"அமெரிக்காவின் வலிமையால் தான் பல நாடுகள் பாதுகாப்பாக இருக்கின்றன. நான் மட்டும் வெள்ளை மாளிகையில் இல்லாவிட்டால், இன்று வாடிகன் என்ற நாடே இருந்திருக்காது. வெளியுறவுக் கொள்கைகளில் போப் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்." போப்பின் அமைதி அழைப்பை 'முட்டாள்தனமானது' எனக் குறிப்பிட்ட டிரம்ப், தனது 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையில் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.
மதத் தலைவர்களுக்கும் அமெரிக்க அதிபருக்கும் இடையே இதுபோன்ற நேரடி மோதல் ஏற்படுவது அரிதான ஒன்று. டிரம்பின் இந்தக் கருத்துக்கள் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள கத்தோலிக்க மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், டிரம்பின் ஆதரவாளர்கள் இதனை "அமெரிக்காவின் இறையாண்மையை விட்டுக் கொடுக்காத செயல்" எனப் பாராட்டி வருகின்றனர். வாடிகன் தரப்பில் இருந்து இந்த விமர்சனங்களுக்கு அதிகாரப்பூர்வப் பதில் இன்னும் வரவில்லை.