undefined

கார் மீது கிரேன் மோதி கோர விபத்து - பெண், 2 குழந்தைகள் பலி!

 

பெங்களூருவில் இருந்து ஐதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது கிரேன் மோதியதில் ஒரு பெண்ணும், 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த பிரமோத் என்பவர், இன்று தனது குடும்பத்தினருடன் காரில் ஐதராபாத் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தார். கார் ஜகதூதி கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த கிரேன் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொருங்கியது. காரில் இருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரைச் ஓட்டிச் சென்ற பிரமோத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையும் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கிரேன் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் பெங்களூரு - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் மற்றும் கிரேன்கள் செல்லும்போது போதிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது