முதல்வர் விஜய்யின் பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சிறப்பு SI வெறித்தனம்!

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சரின் பாதுகாப்புப் பணிக்குச் சென்று திரும்பிய திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் காவலருக்குச் சக காவல் அதிகாரி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் அரசு நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சிறப்புப் பாதுகாப்புக் குழுவினர் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தப் பாதுகாப்புப் பணியில் திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவரும் ஈடுபட்டிருந்தார். முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் சுமுகமாக முடிவடைந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் அனைவரும் வேன் மூலம் மீண்டும் திருநெல்வேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பயணத்தின் போது, வேனில் இருந்த நெல்லையைச் சேர்ந்த சிறப்புச் சார்பு ஆய்வாளர் குமார் என்பவர், உடன் பயணித்த பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது உயர் அதிகாரிகளிடம் உடனடியாக புகார் அளித்தார்.

பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, அத்துமீறலில் ஈடுபட்ட சிறப்புச் சார்பு ஆய்வாளர் குமார் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், துறை ரீதியான கடுமையான நடவடிக்கையாகச் சிறப்பு எஸ்.ஐ. குமாரை பணி இடைநீக்கம் செய்து திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையர் உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் பாதுகாப்புப் பணிக்காகச் சென்ற பெண் காவலருக்கே சக அதிகாரியால் பாலியல் தொந்தரவு ஏற்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.