திருவண்ணாமலை கோயிலில் கதறியழுத பெண் பக்தர்கள்... கூட்ட நெரிசலில் 15 சவரன் தங்க நகைகள் பறிப்பு!
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த எல்லை காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாகத் தொடங்கியது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பெருமளவில் திரண்டதால் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் பெண் பக்தர்களிடம் இருந்து சுமார் 15 சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற எல்லை காளியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவையொட்டி அப்பகுதி முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கும்பாபிஷேக நிகழ்வைக் காணவும், அம்மனைத் தரிசிக்கவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் கோயிலிலும், கிரிவலப் பாதையிலும் கடுமையான மக்கள் நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலையும், தள்ளுமுள்ளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்மத் திருடர்கள், கூட்டத்தில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த பெண் பக்தர்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளைக் குறிவைத்து லாவகமாக அறுத்துச் சென்றுள்ளனர். விழா உற்சாகத்தில் இருந்த நேரத்தில் தங்களது நகைகள் திருடுபோனதை அறிந்த பெண்கள் அதிர்ச்சியடைந்து நடுரோட்டில் கதறி அழுதனர்.
இச்சம்பவம் குறித்து உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கோயிலைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெண்கள் அதிகளவில் கூடும் இது போன்ற திருவிழாக் காலங்களில் தொடர் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கப் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.