கார் ஓட்டப் பழகியபோது குளத்தில் கார் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு - கொல்கத்தாவில் சோகம்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஓட்டுநர் பயிற்சிக்காகக் காரை எடுத்துச் சென்ற 42 வயதுப் பெண், எதிர்பாராத விதமாகக் காரோடு குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேஸ்டோபூர் பிரஃபுல்லா கானன் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா தாஸ் (42) என்பவர், ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறவிருந்த ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
சம்பவத்தன்று தனது மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய அவர், வீட்டில் இருந்த ஹூண்டாய் இயான் (Hyundai Eon) காரை எடுத்துக்கொண்டு தனியாக ஓட்டிப் பழகியுள்ளார். பயிற்சியின் போது சுமித்ரா பிரேக்கிற்குப் பதிலாக தவறுதலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாகச் சென்று அருகில் இருந்த குளத்திற்குள் பாய்ந்து மூழ்கியது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸாரும் தீயணைப்புத் துறையினரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, நீரில் மூழ்கிய காரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும், காரின் உள்ளே சிக்கியிருந்த சுமித்ரா தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.