அமெரிக்காவில் தஞ்சம் கோரிய பெண் டாக்டர் கைது... 10 வருட கனவு சிதைந்ததாகக் கணவர் கண்ணீர்!

 

அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கிவிட அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் மருத்துவர், விமான நிலையத்தில் வைத்து எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலா நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரூபெலிஸ் பொலிவார், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மிலென்கோ பாரியா (36), ஒரு தகவல் தொழில்நுட்ப பொறியாளர். இந்தத் தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான சட்டப்பூர்வ அனுமதி கோரி விண்ணப்பித்து, அதற்காகக் காத்திருந்தனர்.

தங்களது விண்ணப்பம் தொடர்பான முக்கிய நேர்காணலில் பங்கேற்பதற்காக, இந்தத் தம்பதியினர் தங்களது 5 வயது மகளுடன் கலிபோர்னியாவுக்குப் பயணம் செய்தனர். அப்போது விமான நிலையத்தில் அவர்களை வழிமறித்த அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர், திடீரென ரூபெலிஸைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரூபெலிஸைச் சிறையில் அடைத்த அதிகாரிகள், அவரது 5 வயது மகளை மட்டும் தந்தையுடன் செல்ல அனுமதித்தனர். இதனால் செய்வதறியாது திகைத்த மிலென்கோ, தனது மனைவியின்றி நேர்காணலில் பங்கேற்க வேண்டிய துயர நிலைக்குத் தள்ளப்பட்டார்.

"நாங்கள் 10 ஆண்டுகளாகக் கண்டு வந்த கனவு ஒரே நாளில் சிதைந்துவிட்டது" என மிலென்கோ வேதனையுடன் தெரிவித்தார். செல்லுபடியாகும் ஆவணங்கள் கையில் இருந்தபோதிலும், டிரம்ப் தலைமையிலான தற்போதைய அமெரிக்க அரசின் கடுமையான குடியேற்றச் சட்டங்கள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் தஞ்சம் கோருவோர் மீதான பிடி இறுக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.