தவெக நிர்வாகி மீது இளம்பெண் பாலியல் புகார்... 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!
கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மீது, அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரமடை பகுதியில் தவெக ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருபவர் கருப்பசாமி. இவர் தனக்குப் பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, அதே கட்சியில் பணியாற்றும் இளம்பெண் நிர்வாகி ஒருவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் புகார் மனு அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகியின் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகியின் வீட்டிற்கே நேரில் சென்று விரிவான விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், காரமடை தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆளும் கட்சியின் நிர்வாகி மீதே அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் கோவை மாவட்ட அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த நிர்வாகி வானதி சீனிவாசன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், "காரமடையில் தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பெண் நிர்வாகி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சொந்தக் கட்சிக்குள்ளேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையில், ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களுக்கும் தவெக எப்படிப் பாதுகாப்பு அளிக்கும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் ஒன்றியச் செயலாளர் கருப்பசாமியைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.