காதலனின் கார் முழுக்க லிப்ஸ்டிக்கால் 3,400 முத்தங்களை பதித்த காதலி: ரூ.5,500 அபராதம் விதித்த போலீசார்!
மத்திய பிரதேசத்தில் காதலனின் கார் முழுவதும் 3,400 உதட்டுத் தடங்களைப் பதித்து ஆச்சரியப்படுத்த முயன்ற காதலியின் செயல் இணையத்தில் வைரலான நிலையில், காதலனுக்குக் காவல்துறை அபராதம் விதித்துப் பாடம் கற்பித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரின் தாதிபூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது காதலி, ஆதித்யாவின் காரை சர்ப்ரைஸ் செய்வதற்காகச் சுமார் ₹900 மதிப்பிலான லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தி, 3 மணி நேரம் செலவழித்து காரின் கதவு, பானட், பூட் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் 3,400 உதட்டுத் தடங்களைப் பதித்துள்ளார்.
Kissing Car' என அழைக்கப்பட்ட இந்த காரை ஆதித்யா சாலையில் ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. பொது இடங்களில் கவனத்தைச் சிதறடிக்கும் வகையிலும் மோட்டார் வாகன விதிகளை மீறும் வகையிலும் காரை ஓட்டி வந்ததற்காக, போக்குவரத்துப் காவல்துறையினர் ஆதித்யாவிற்கு ரூ.5,500 அபராதம் விதித்தனர்.
அதுமட்டுமின்றி, கார் முழுவதும் பதிந்திருந்த 3,400 லிப்ஸ்டிக் அடையாளங்களையும் ஆதித்யாவின் கையாலேயே துடைத்து அழிக்க வைத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இணையத்தில் புகழ்பெற வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்ட இந்த விசித்திரச் செயல், இறுதியில் அபராதத்தில் முடிடைந்துள்ளது.