பெண் ஆய்வாளருக்குப் பாலியல் தொல்லை.. ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது!

 

சென்னை முகப்பேரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் சக பெண் ஆய்வாளருக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மற்றொரு ஜி.எஸ்.டி. ஆய்வாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை முகப்பேர் 2-வது பிரதான சாலையில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சவுரவ் (28) என்பவரும் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

சவுரவ் கடந்த சில நாட்களாகப் பெண் ஆய்வாளரிடம் இரட்டை அர்த்தத்திலும், பாலியல் ரீதியாகவும் பேசித் தொந்தரவு அளித்து வந்துள்ளார். மேலும், அந்தப் பெண் ஆய்வாளரின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன், உயர் அதிகாரிகளுடன் தொடர்புபடுத்தித் தகாத வாசகங்களையும் பரப்பியுள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஆய்வாளர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பெண் வன்முறை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜி.எஸ்.டி. ஆய்வாளர் சவுரவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.