தேச துரோக வழக்கில் கைதான பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை!

 

உக்ரைன் நாட்டிற்கு ரகசியமாக நிதி உதவி வழங்கி தேசத்துரோகத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், ரஷியாவைச் சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு மாஸ்கோ நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

'போர்ப்ஸ் ரஷியா' இதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த தர்யா ஷிபச்சேவா மீது, உக்ரைனுக்கு ஆதரவாக நிதி திரட்டி ரகசியமாக அனுப்பியதாகத் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தனக்கு விதிக்கப்படும் தண்டனையைக் குறைக்கும் நோக்கில் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.

இருப்பினும், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் அனுமதிக்கப்படாத மூடிய கதவுகளுக்குப் பின்  நடைபெற்ற ரகசிய விசாரணையின் முடிவில், மாஸ்கோ நீதிமன்றம் அவருக்குக் கடுமையான 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு, நாட்டின் இராணுவ நடவடிக்கைகளுக்கோ அல்லது உக்ரைனுக்கோ ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது ரஷிய அரசு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.