நகராட்சி கமிஷனர் சீட்டில் அமர்ந்து தவெக பெண் எம்.எல்.ஏ அடாவடி... தொகுதிமக்கள் அதிருப்தி!

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் தவெக பெண் சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையரின் அதிகாரப்பூர்வ நாற்காலியில் அமர்ந்து ஆய்வு நடத்திய சம்பவம் அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சிந்து. இவர் இன்று குடியாத்தம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள நகராட்சி ஆணையர் அறைக்குச் சென்ற எம்.எல்.ஏ சிந்து, அரசு விதிமுறைகளை மீறி ஆணையரின் அதிகாரப்பூர்வ இருக்கையிலேயே அமர்ந்துள்ளார். பின்னர், நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியை அவருக்கு எதிரே மற்றொரு நாற்காலியில் அமர வைத்து, தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்துக் கேட்டுள்ளார். இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகப் பரவி வருகின்றன.

இந்த ஆய்வின் போது எடுக்கப்பட்ட வீடியோவை எம்.எல்.ஏ சிந்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அரசு அதிகாரியின் நாற்காலியில் எம்.எல்.ஏ அமர்ந்ததற்குப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்யத் தொடங்கினர். விவகாரம் சர்ச்சையானதை உணர்ந்த எம்.எல்.ஏ சிந்து, உடனடியாக அந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இருப்பினும், அதற்குள் அந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவிவிட்டன.

சட்டமன்ற உறுப்பினர் ஒரு அரசு அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து உத்தரவிடுவது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின்படி, ஒரு நகராட்சியின் நிர்வாகத் தலைவராக நகராட்சி ஆணையர் மட்டுமே செயல்பட முடியும்.

சட்டமன்ற உறுப்பினருக்கு நகராட்சி கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளர் அந்தஸ்து மட்டுமே உள்ளது. அவர் மக்களின் குறைகளைக் கமிஷனரிடம் எடுத்துரைக்கலாம் அல்லது கமிஷனர் அறையிலேயே அவரது முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தலாம். ஆனால், எந்தச் சூழலிலும் கமிஷனரின் நாற்காலியில் அமரச் சட்டப்படி அனுமதியில்லை.

மறுபுறம், குடியாத்தம் தொகுதி மக்கள் மத்தியிலும் இந்தச் சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "தேர்தல் சமயத்தில் வாக்குச் சேகரிக்கவும் தொகுதிக்குள் வரவில்லை, வெற்றி பெற்ற பிறகு நன்றி தெரிவிக்கவும் வரவில்லை. எம்.எல்.ஏ-வின் முகத்தைக் கூடப் பார்க்காமல் வாக்களித்துவிட்டோமே" எனப் புலம்பி வரும் வேளையில், தற்பொழுது இத்தகைய அத்துமீறல் சம்பவத்தில் எம்.எல்.ஏ ஈடுபட்டிருப்பது அரசு அதிகாரிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.