தலைக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சல் சுட்டுக்கொலை

 

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், தேடப்பட்டு வந்த முக்கிய பெண் நக்சல் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட நக்சலின் தலைக்கு அரசு ஏற்கனவே 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கான்கேர் மாவட்டத்தில் உள்ள மச்சபள்ளி  கிராமத்தை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு நேற்றுகாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட ரிசர்வ் கார்டு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினர் காட்டை நெருங்கியபோது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்குப் பதிலடியாகப் பாதுகாப்புப் படையினரும் அதிரடியாகத் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், நக்சல்கள் பின்வாங்கிச் சென்றனர். சண்டை முடிந்த பிறகு அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், ஒரு பெண் நக்சலின் சடலம் மீட்கப்பட்டது.

கொல்லப்பட்டவர் நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகியான ரூபி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய இவர் மீது சத்தீஸ்கர் காவல்துறை ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவித்து நீண்ட காலமாகத் தேடி வந்தது. சடலத்தின் அருகே இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் நக்சல் இலக்கியங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது அந்தப் பகுதியில் மேலும் நக்சல்கள் பதுங்கி இருக்கிறார்களா என்பதை அறியப் பாதுகாப்புப் படையினர் 'கூம்பிங்' ஆபரேஷனைத் தொடர்ந்து வருகின்றனர்.