நடுரோட்டில் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை - தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
திருப்பத்தூர் அருகே பணிக்குச் சென்று வரும் பெண் ஒருவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த புகாரில், த.வெ.க நிர்வாகி சத்தியமூர்த்தி என்பவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் அருகில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றி வருகிறார். திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (35). இவர் திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய த.வெ.க வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.
போஸ்ட் மாஸ்டர் தினமும் தனது வீட்டில் இருந்து தினமும் மொபட்டில் பணிக்குச் செல்லும்போது, சத்தியமூர்த்தி தனது பைக்கில் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். தவறான சைகைகளைக் காட்டியும், தனது பைக்கால் மொபட்டை மோதுவது போலவும் பயமுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் டார்ச்சர் செய்த சத்தியமூர்த்தியை அந்தப் பெண் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, தனது பைக்கால் மோதி அந்தப் பெண்ணைக் கீழே தள்ள முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குரிசிலாப்பட்டு போலீசார் சத்தியமூர்த்தி மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே ஒரு பெண் மாயமான வழக்கில் பணம் கேட்டு மிரட்டியதாக இதே காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது தலைமறைவாக உள்ள சத்தியமூர்த்தியைப் பிடிக்கப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 2026 தேர்தலுக்காகத் தயாராகி வரும் த.வெ.க-வின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.