ரேஷன் கடைக்குத் தானே தீ வைத்துவிட்டு, நாடகமாடிய பெண் விற்பனையாளர் கைது!
சேலம் மாவட்டம் குறும்பட்டி நாச்சியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், கடையில் இருந்த அரிசி மூட்டைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தாமே தீ வைத்துவிட்டு நாடகமாடிய பெண் விற்பனையாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குறும்பட்டி நாச்சியூர் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் ஹேமலத்தா என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 18-ஆம் தேதி இக்கடையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
கடையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனை செய்யப்படாமல் மீதமிருந்த பட்டாசுகள் எதிர்பாராத விதமாகத் தீப்பிடித்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக ஹேமலத்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பட்டாசுகளால் தீ விபத்து ஏற்படவில்லை என்பதும், ரேஷன் கடையில் இருந்த அரிசி மூட்டைகள் மீது ஹேமலதாவே மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துவிட்டு, அதனைத் தற்செயலான விபத்து போல் திசைதிருப்ப நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து காவல்துறையினர் ஹேமலதா மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள ஹேமலதாவைப் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.