காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை... சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்!
பீகார் மாநிலத்தில் வழக்கு ஒன்றில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாட்னா அருகேயுள்ள முசாபர்பூர்: பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அகியாபூர் காவல் நிலையத்தில் லாலன் குமார் என்பவர் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
இவரிடம் பெண் ஒருவர் வழக்குச் சார்ந்த புகார் ஒன்றை அளிப்பதற்காகக் காவல் நிலையத்திற்கு வந்து சென்றுள்ளார். புகார் கொடுத்த பெண்ணின் செல்போன் எண்ணைப் பயன்படுத்தி, சப்-இன்ஸ்பெக்டர் லாலன் குமார் அந்தப் பெண்ணுக்கு தொடர்ச்சியாக மெசேஜ்களை அனுப்பியும், செல்போனில் அழைத்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்தும் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், காவல் துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்துப் ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் உடனடியாக நடத்தப்பட்ட துறை ரீதியான முதற்கட்ட விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் லாலன் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உடனடியாக உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் அதிகாரியே இந்த அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.