பெங்களூரில் காதலை நிராகரித்த இளம்பெண் நடுரோட்டில் குத்திக் கொலை... சிசிடிவி வீடியோ வெளியீடு!
பெங்களூருவில் தன்னைக் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து வாலிபர் ஒருவர் கத்தியால் குத்துக் கொல்லும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் தனது காதலை நிராகரித்த ஆத்திரத்தில் வாலிபர் சூர்யா இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜூலை 13-ம் தேதியன்று வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது, வழியில் கேஸ் லாரிக்குப் பின்னால் மறைந்திருந்த சூர்யா திடீரென அம்ருதாவை வழிமறித்துள்ளார்.
தன்னுடைய காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில், அப்பெண்ணின் முதுகு மற்றும் மார்புப் பகுதியில் சூர்யா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பலமுறை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்து அதீத ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்ருதா, கடந்த ஜூலை 15-ஆம் தேதியன்று சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இக்கொலை வழக்கில் தொடர்புடைய சூர்யா மற்றும் அவரது சகோதரர் தனுஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.