பைக் நிறுத்தும் தகராறில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை - கணவர் ஐசியுவில் அனுமதி; பக்கத்து வீட்டுக்காரர் வெறித்தனம்!

 

டெல்லியில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாருக்குள் ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, கத்திக்குத்து மோதலாக மாறி ஒரு இளம்பெண்ணின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்மேற்கு டெல்லியின் பிந்தாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொலை சம்பவம் டெல்லி மக்களை அதிர செய்துள்ளது. டெல்லி பிந்தாபூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி. இவரது மனைவி ஆர்த்தி (32). இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில், தங்களது வீட்டின் முன்பாக பைக் நிறுத்துவது தொடர்பாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் பாப்பு (40) என்பவருடன் விக்கி மற்றும் ஆர்த்திக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த பாப்பு மற்றும் அவருடன் இருந்த ஒரு சிறுவன் ஆகிய இருவரும் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்திகளை எடுத்து விக்கி மற்றும் ஆர்த்தியைச் சரமாரியாகக் குத்தத் தொடங்கினர். அப்பகுதியினரின் இருவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து, இரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பதியரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தீனதயாள் உபாத்தியாயா அரசு மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்:

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஆர்த்தியின் உடலில் ஏற்பட்ட ஆழமான கத்திக் காயங்களால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் விக்கியின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த கத்திக்குத்து விழுந்துள்ளதால், அவருக்குத் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, உயிருக்குப் போராடிய நிலையில் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்துப் பிந்தாபூர் போலீசார் உடனடியாகக் கொலை (பிரிவு 302) மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர். தலைமறைவாக முயன்ற முக்கியக் குற்றவாளியான பாப்புவை (40) டெல்லி தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்து அவரிடமிருந்த கொலைக் கருவிகளைப் பறிமுதல் செய்தனர். இந்தத் தாக்குதலில் பாப்புவுடன் இணைந்து செயல்பட்ட மற்றொரு சிறுவனைப்  பிடிப்பதற்காகப் பிந்தாபூர் போலீஸார் தனிப்படை அமைத்துத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.