பட்டா மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ கைது! 

 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பிக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா, வெறும் 3.5 சென்ட் நிலத்திற்குப் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.1.25 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மலைப்பிரதேசமான நீலகிரியில் இவ்வளவு பெரிய தொகை லஞ்சமாகக் கேட்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டியை அடுத்த குந்தா தாலுகா எடக்காடு நடுஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். இவரது தந்தை பெயரில் இருந்த 3.5 சென்ட் நிலத்தைத் 'தான செட்டில்மெண்ட்' முறையில் வாங்கிய இவர், பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளார். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் பிக்கட்டி வி.ஏ.ஓ உமா பிரியாவைத் (29) தொடர்பு கொண்ட போது, அவர் தொடக்கத்தில் ரூ.1.75 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.1.25 லட்சமாகக் குறைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்த், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். டிஎஸ்பி ஜாய் தயாள் உத்தரவின் பேரில், ரசாயனம் தடவிய பணத்துடன் அனுப்பப்பட்ட வசந்த், வி.ஏ.ஓ-வின் அறிவுறுத்தலின்படி மஞ்சூரில் உள்ள தனியார் வங்கி ஊழியரிடம் பணத்தைக் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து வி.ஏ.ஓ உமா பிரியா கைது செய்யப்பட்டார்.

சமவெளிப் பகுதிகளில் பட்டா மாறுதலுக்குச் சில ஆயிரங்கள் லஞ்சம் கேட்கப்படுவதே விவாதிக்கப்படும் நிலையில், ஒரு சிறிய மலைக்கிராமத்தில் வெறும் 3.5 சென்ட் நிலத்திற்கு ரூ.1.25 லட்சம் கேட்டது ஏன் என்ற கோணத்தில் நெட்டிசன்கள் பலரும் தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அந்த முக்கிய 5 கேள்விகள் இதோ:

தான செட்டில்மெண்ட் நிலத்திற்கு ஆன்லைனில் பட்டாவுக்கு அப்ளை செய்துவிட்ட பிறகு, புகார்தாரர் ஏன் நேரடியாக வி.ஏ.ஓ-வை அணுக வேண்டும்? ஆன்லைன் முறை செயல்பாட்டில் இருக்கும் போது வி.ஏ.ஓ-வின் தலையீடு எங்கு வந்தது? அதே போன்று நிலம் அப்பாவின் பெயரில் இருந்தாலும், அந்த 3.5 சென்ட் நிலத்தின் மீது குடும்பத்தின் மற்ற வாரிசுதாரர்களுக்கு ஏதேனும் சட்டப்பூர்வ உரிமைப் பிரச்சினை அல்லது வாரிசு உரிமைச் சிக்கல் இருந்ததா?

தான செட்டில்மெண்ட் பத்திரத்திற்கு விண்ணப்பித்த போது, அந்த ஆவணத்தில் சர்வே எண், உட்பிரிவு அல்லது நில அளவு ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்ததா? குறிப்பிட்ட அந்த 3.5 சென்ட் நிலம் தனி நபருக்குச் சொந்தமான பட்டா நிலமா? அல்லது மலைப்பகுதியில் உள்ள புறம்போக்கு, நீர்நிலை, மேய்க்கால் நிலம் வகைப்பாடு தொடர்பான சிக்கல்களில் மாட்டியுள்ளதா?

ஏற்கெனவே உள்ள பெரிய பட்டாவில் இருந்து 3.5 சென்ட் நிலத்தை மட்டும் தனியாகப் பிரித்துத் தனிப்பட்ட பட்டா வழங்க வேண்டிய அவசியமான சட்டச்சிக்கல் அல்லது தாமதம் எங்கு ஏற்பட்டது?

நீலகிரி மலைப்பிரதேசங்களில் நிலப் பரிமாற்றங்கள் மற்றும் கட்டிட அனுமதி விதிகளில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றனவா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.