சேலத்தில் சூட்கேஸில் பெண் சடலம்... அடையாளத்தை மாற்றி, தலைமறைவாக வாழ்ந்து வந்த பெண் கைது!
சேலத்தில் கடந்த 2021ம் ஆண்டு அழகு நிலைய உரிமையாளரான வங்கதேசப் பெண் கொலை செய்யப்பட்டுச் சூட்கேஸில் அடைக்கப்பட்டுக் கிடந்த வழக்கில், 5 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்த பெண் குற்றவாளி புனேவில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டி குமாரசாமிப்பட்டி பகுதியில் ஸ்பா மற்றும் அழகு நிலையம் நடத்தி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த தேஜ்மண்டல் என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தனது வாடகை வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது உடல் ஒரு பெரிய சூட்கேசுக்குள் அடைக்கப்பட்டு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
தேஜ்மண்டலிடம் பணியாற்றிய வங்கதேசத்தைச் சேர்ந்த லப்லு, அவரது மனைவி நிஷி, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய 4 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பெங்களூரு வழக்கு ஒன்றில் லப்லு மற்றும் நிஷிக்கு தேஜ்மண்டல் உதவ மறுத்ததாகவும், முறையாகச் சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும், நிஷியுடன் ஏற்பட்ட தகராறு மற்றும் சம்பளப் பாக்கிப் பிரச்சினையால் ஆத்திரமடைந்த கும்பல், தேஜ்மண்டலைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளது.
திட்டமிட்டபடி அவரை கொலை செய்த கும்பல், உடலைச் சூட்கேஸில் அடைத்துவிட்டு நகை மற்றும் பணத்துடன் தப்பியோடியது. சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்ட போதிலும், அவர்கள் பெங்களூரு வழியாக வங்கதேசத்திற்கே தப்பிச் சென்றுவிட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளாகப் போலீசாருக்குப் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த நிஷி, தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு மீண்டும் ரகசியமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். புனேவில் தங்கியிருந்த அவர், கர்நாடகாவைச் சேர்ந்த பரசுராம் நாடார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் புனே சென்று நிஷியை அதிரடியாகக் கைது செய்து சேலம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
நிஷி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தொடர்ந்து தலைமறைவாக உள்ள லப்லு, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய மற்ற 3 பேரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.